Monday, November 12, 2007

கெங்கவரத்தில் ஒரு நாள்

கெங்கவரத்தில் ஒரு நாள்.....பல நாள் கழித்து..பல மணி நேரத்தை, பலாச் சுளைக்கு இணையாகப், பயணித்ததை இங்கு பகிரிந்து கொள்ளப்போகிறேன்..

வெள்ளிக்கிழமை மாலை மணி ஐந்து.. அடித்துப் புடித்து கத்திப்பாராவை அடைந்து, ஒருவழியாக திருவண்ணாமலை பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.. கூட்டம் அதிகம் இல்லை.. உறங்குவதற்கு உத்தமமாக ஒரு இருக்கையை பிடித்து அமர்ந்தேன்..

மாலை நேரம்..சிவப்புச் சூரியன் ஓய்வெடுக்க ஒதுங்கிக் கொண்டு இருந்தான்.. இதயத்துக்கு இதமாக பண்பலை பாடல்களின் தாலாட்டு ஒருபுறம், அழகிய சாலையில், அதிவேக ஓட்டத்தில், மாலைக் காற்றின் மயக்கம் மறுபுறம், என்னை அரியாமல் எப்போதும் போல், நித்திரையில் நிதானத்தை இழந்தேன்.. ஓரு மணி நேரம் ஓடிப் போனது..

அடுத்த இரு மணி நேரம், பார்க்காத ஊரைப் பற்றி பல கற்பனைகளுடன் மெதுவாக நகர்ந்தது.. செஞ்சியில் இறங்கிவிட்டு எனது நண்பன் ஊருக்காக, அடுத்த பேருந்துக்கு மாறினேன். செஞ்சியில் என்னை சந்திப்பதாக வாக்கு கொடுத்து ஏமாற்றிய என் நண்பது மிது எரிச்சல் ஒருபுறம், நிற்க கூட இடம் கிடைக்காமல் உடம்பின் உலைச்சல் மறுபுரம், என எப்படியோ முக்கால் மணி பயணத்தை முடித்தேன்..

நல்ல வேலை.. தொலைபேசியின் உதவியால் திட்டத் திருத்த்ங்களை எனது நண்பனுக்கு தெரிவிக்க, அவன் சரியான நேரத்திற்கு வந்து காத்திருந்தான்.. பேருந்தில் இருந்து இறங்கும், என்னை கவனிக்காமல் பேருந்துக்குள் தொலவிக் கொண்டிருக்கையில், பல வருடங்களுக்கு முன் என்னை பார்த்து இருந்த அவன் தம்பி அடையாலம் கண்டு கொள்ள, பிறகு அப்படியே அவன் வீட்டை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தேம்....

மணி பத்து இருக்கும். நண்பனின் அம்மா சுடச்சுட சப்பாத்தி தயார் செய்தார்கள். தொட்டுக்க, தக்காளி வெங்காயம் பச்ச மிளகாய் சேர்த்து காரமாக கிராமத்து வாசனையில் வதக்கி வைத்திருந்தர்கள். ஒரு அரைமணி நேரத்துக்கு எதையும் சட்டைபண்ணாமல், கணக்கில்லாமல் காலிபண்ணினோம் சப்பாத்திகளை..

வந்த கலைப்புத்தீர, காத்தாடி இருந்தும் பயன்படுத்தாமல், அருமையான தூக்கம்..எழும்போது மணி எட்டு இருக்கும். உண்மையான பசும்பாலில், அருமையாக அமமா தாயாரித்து வைத்து இருந்த தேனீரை பருகி விட்டு, எனது நண்பனின் நண்பர்களுடன் மலையை நோக்கி எங்க்ள் பயணத்தைத் தொடங்கினோம்..

ஐந்து நிமிட நடைக்கு பிறகு பச்சை பசேல் வயலின் வரப்புகள் எங்களுக்கு சாலைகளாக மாறியது. காலை நேரத்து கதிரவன் ஓய்வெடுத்த கலைப்பால் மெதுவாக எழுந்து கொண்டு இருந்தான். இருந்தாலும் குளுமை காற்றின் முன் கதிரவனின் ஒளி காணமல் போனதால், அழகிய துன்பமாக இருந்தது, எங்கள் நடை...



கிட்டத்தட்ட பத்து நிமிடம், வயல்களை தாண்ட, மலை அடிவாரத்தை அடைந்தோம்.. பெரிய மலை இல்லை, சிறு சிறு குன்றுகள் என்றாலும், மனிதனிடம் மாட்டாத இயற்கை படைப்புகள். ஆட்கள் நடந்ததால் உருவான ஒத்தை அடிப்பாதை. வழி நெடுக்கிளும் முற்புதர்களும், பெயர் தெரியாத செடி கொடிகளும்.. அங்காங்கே ஊத்து நீர், பாதையை வழி மறித்தது..



கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்து இருப்போம்.. போகும் வழி முழுவதையும் புகைப் படங்களாக என் புகைப் படக்கருவியில் பதித்தோம். நான் மட்டும் அல்ல, வந்த என் நண்பர்கள் அனைவரும், இயற்கையின் பாசங்கை, வித விதமான கோணங்களில், புகைப் படங்களாகப் பொருக்கினார்கள்...

அங்கு ஒரு பெரிய பாறை. ஏற முடியாது என என் நண்பன் சவால் விட.. சரி முயற்சி செய்து பார்ப்பது என முழு மூச்சில் இறங்கினேன். இரண்டு அடியில் நிலை தடுமாரி சருக்கி வில, நல்ல வேலை அடியெதுவும் பிடிக்கவில்லை. வெறி அதிகமானவனாய் வெற்றியுடன் ஏறி அதை புகை படமாகவும் எடுத்துக் கொண்டேன்



காலக் கடிவாலத்தால், பயணத்தை சுருக்கிக் கொண்டு, வந்த வழியை திரும்ப கால் பதித்தோம், ஆனால் எதிர் திசையில். வரும் வழியில் வயலுக்கு நடுவில், கிணத்தில் குளியல். கிட்டத்தட்ட ஒரு பத்து அடி ஆழத்தில் தண்ணி இருந்தது. படி இருந்ததால் பிரச்சனை ஒன்றும் இல்லை.



வரும் போது கல்லுச்சந்தில் ஒடிய உடும்பும், தண்ணிக்குள் ஓடி ஒழிந்த தண்ணிப் பாம்பும் ஒருபுறம் அச்சத்தை உமிழ்ந்தது என்மனதில். இருப்பினும் பல ஆண்டு கழித்து கிணத்தில் குளிக்கும் சந்தர்ப்பம். வீணாக்க விரும்பவில்லை, வீணாக்கினோம் ஒரு மணி நேரத்தை தண்ணியில்...

வீட்டை அடைந்தவுடன் அரிசி சாதத்துடன் மொச்சை குழம்பு. கூட காரமாய் அப்போதுதான் வதக்கி இறக்கிய மாங்காய் தொக்கு, வாழைக்காய் பொரியல், பீக்கங்காய் வறுவல், ரசம் என அனைத்தும்.. தனியாய் மாட்டிய என் நண்பனின் அத்தை மகனை கிண்டலும் கேலியுமாக முடித்தோம் மதிய உணவை..

பிறகு மாலை.. என் நண்பனின் மாமா வயளுக்கு நடைப் பயணம்.. அங்கு சூரிய ஒளி சுண்ட மறையும் வரை சும்மா அரட்டை அடித்து விட்டு வீடு திரும்பினோம்.. பல வருடங்களுக்கு பிறகு இருட்டில் விளக்கொளி இல்லாமல் நிதானத்தில் நடந்தேன் எண நினைக்கிறேன்..

இரவு, அரிசியுடன் முடக்கத்தான் கீரை கலந்து, இதுவரை பார்த்திரத பச்சை தோசை சுட்டதுடன், காரமாய் தக்காளி சட்னியும் அரைத்து வைத்து இருந்தர்கள் என் நண்பனின் அமமா அவர்கள்.. பிறகு இரவு உணவை இனிதே முடித்து விட்டு நான், எனது நண்பன், அவனுடைய மாமா பையன் மூவரும் மோட்டார் வாகனத்தில் அருகில் இருந்த நகரத்தில் இறக்கி என்னை விட, அங்கிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி பயணத்தைத் தொடர்ந்தேன்